காஞ்சிபுரம்: பெருநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள வையாவூர், நல்லூர், பாரதிநகர், அசோக் நகர், வள்ளுவபாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக அடிப்படை மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருவதாக குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினரிடம் புகார் தெரிவித்து மின்மாற்றியினை தரம் உயர்த்தி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், சட்டப்பேரவை உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் தரம் உயர்த்தப்பட்ட மின் மாற்றி அமைத்து தர வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
மக்கள் பிரதிநிதியின் கோரிக்கையை ஏற்று, புதிய மின்மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வையாவூர் கிராமத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் ரூபாய் 2 கோடியே, ஒரு லட்சம் மதிப்பில் 8,000 கிலோ வாட் திறன் கொண்ட அதிநவீன மின்மாற்றி அமைக்கப்பட்டது.
புதியதாக அமைக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியை சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து, மின்மாற்றியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் பிரசாந்த், செயற்பொறியாளர் சரவண தங்கம், இளநிலைப் பொறியாளர் தேவராஜன் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.