காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றானது தென்னேரி ஏரி. இந்த ஏரி நீரை பயன்படுத்தி 5 ஆயிரத்து 588 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. தென்னேரி, மஞ்சமேடு, விளாகம், தென்னேரி அகரம், அயிமிச்சேரி, வாரணவாசி, தொள்ளாழி, தேவரியம்பாக்கம், திருவங்கரனை உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயத்திற்கு இந்த தென்னேரி ஏரி நீர் பயன்படுகிறது.
தற்போது, புரெவி புயலால் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் தென்னேரி ஏரி தனது முழு கொள்ளளவான 18 அடியை எட்டியுள்ளது. இதனால், மேட்டுகாலனி பகுதியில் உள்ள தென்னேரி ஏரியின் கலங்களிலிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக, வாலாஜாபாத்-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் தென்னேரி ஏரி கிராமம் அருகேயுள்ள மஞ்சமேடு பகுதியிலுள்ள தரைப்பாலம் மூழ்கி மழை வெள்ளநீர் இரண்டு அடிக்கு மேல் செல்வதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடுதலாக 15 கிலோமீட்டர் தூரம்வரை செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மஞ்சமேடு தரைப்பாலம் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள், போக்குவரத்து பயன்பாட்டிற்கு ஏதுவாக தரைப்பாலத்தை உயர்த்தி கட்டிட வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குன்றத்தூர் - ஸ்ரீ பெரும்புதூர் சாலைக்கு தற்காலிக பாலம் திறப்பு!