காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் களத்தில் இறங்கி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (பிப்.12) திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்குத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
'தங்கக் காப்பு போட்டு பரப்புரைக்கு போக வேண்டாம்'
அதன் ஒரு பகுதியாக, பூக்கடை சத்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில், "விரோதி என்று பார்க்காமல், துரோகத்தை மறந்து வீடு வீடாகச் சென்று வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் 550 தேர்தல் வாக்குறுதிகளில் 90 விழுக்காடு திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
கடந்த ஆட்சியில் கரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் எனத் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். ஆனால், முதலமைச்சர் ஆன பிறகு ஸ்டாலினின் முதல் கையெழுத்தாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயை வழங்கினார்" எனக் கூற பொதுமக்கள் யாரும் கைதட்டாததால், அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களா என்று கேட்டுக் கைதட்டல்களை வாங்கிக்கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், "செல்வந்தராக இருக்கும் ஆண் வேட்பாளர்கள் கழுத்தில் அட்டியையும் கையில் தங்கப் பெரிய காப்பும் போட்டுக்கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் எந்த தவறும் நடக்காமல் நடந்து கொள்ள வேண்டும்" எனவும் வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாத்தே நடிகை பரப்புரை!