காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்தார் மாட வீதிப் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (52). இவர் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (டிச.16) அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார்.
பின்னர், தனது வீட்டின் நுழைவாயில் பகுதியில் பணப்பையுடன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளேச் சென்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அந்த பணப்பை காணவில்லை. உடனடியாக, தன்னுடைய மனைவியிடம் கேட்டுள்ளார். அவர் தான் எடுக்கவில்லை என்றும், யாரோ ஒரு சிறுவன் வீட்டிற்கு வந்து உடனே வெளியேச் சென்று விட்டான் எனவும் கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வடிவேல் பேருந்து நிலையம் வரைச் சென்று தேடிப் பார்த்துள்ளார்.
இது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் ஒரு சிறுவன் உட்பட 3 நபர்கள் சென்னைச் செல்லக்கூடிய அரசுப் பேருந்தில் ஏறிச் சென்றது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறை நசரத்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை நசரத்பேட்டை காவல் நிலைய காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தி சிறுவன் உட்பட 3 பேரைச் சுற்றி வளைத்தனர். பின்னர், மூன்று பேரையும் அழைத்துக்கொண்டு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வைத்து காவல்துறை விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், மூவரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (36), சந்தோஷ் (20), மற்றும் 14 வயதுடைய சிறுவன் என்பது தெரிய வந்தது. மேலும், மூவரும் இது போன்ற வேறு கொள்ளையில் ஈடுபட்டனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவரைப் பின்தொடர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் மூன்று வடமாநிலக் கொள்ளையர்கள் ரூபாய் 5 லட்சம் பணத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அமமுக யாரோடு தேர்தல் கூட்டணி? - ரகசியத்தை உடைத்த டிடிவி தினகரன்!