காஞ்சிபுரம் அருகேயுள்ள செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 31 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில், 28 வயது இளைஞர் முருகன் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மூன்று குழந்தைகள் சாப்பிட்ட உணவு நஞ்சாகி, உடலநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக்கு முன்பாக உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட உணவு வகை சார்ந்த நிறுவனங்களில் பயன்படுத்திவந்த அரிசி, பருப்பு, மாவு, எண்ணெய் மற்றும் மசாலா பொருள்களின் காலாவதி நிலைமையை கருத்தில் கொண்டு அதை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் ஊரடங்கு சமயத்தில் எந்த ஒரு வருமானமும் இல்லாததால் நஷ்டத்தில் இருந்த உரிமையாளர்கள், ஊரடங்கு தளர்வால் புதிதாக வாங்கிய உணவு பொருள்களுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு இருப்பு வைத்திருந்த உணவு பொருள்களையும் சேர்த்து பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த உணவுகளால் ஏற்படும் ஆபத்தை உணராமல், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சிறியவர், பெரியவர் என அனைத்து வயதினரும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் பலருக்கு உடல் உபாதை ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக பிரத்தியேக குழு அமைத்து உணவு சார்ந்த பொருள்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இடையே ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் மூன்று நாள்களில் 39 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ. 32 ஆயிரம் வசூல்!