தமிழ்நாட்டில், மார்ச் மாதம் ஓமன் நாட்டிலிருந்து காஞ்சிபுரம் வந்த பொறியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அன்றுமுதல் தற்போதுவரை கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ரயில், பேருந்து போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.
அதன்பின், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் கடந்த மாதம் முதல் பொதுப் போக்குவரத்து பல கட்டங்களில் பயன்பாட்டிற்கு வந்தது. தென்னக ரயில்வே சார்பில் முதல்கட்டமாக விரைவு ரயிலும், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர், அதைச் சார்ந்த தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் செல்ல சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை புறநகர் ரயில் சேவையும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரத்திலிருந்து தலைமைச் செயலகம், பிற அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள், தனியார் தொழிற்சாலை, தனியார் நிறுவனம் எனப் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ரயில் சேவையைப் பெரிதும் பயன்படுத்திவந்த நிலையில் செங்கல்பட்டிலிருந்து திருமால்பூர் ரயில் சேவையைத் தொடங்க கோரிக்கைவைத்தனர்.
இதனை ஏற்ற தென்னக ரயில்வே, இன்றுமுதல் திருமால்பூரிலிருந்து காலை 6 மணி, 7 மணி மட்டும் 8.45 என்னும் நேரங்களில் மூன்று ரயில் சேவைகளைத் தொடங்கியுள்ளன. இந்த ரயில் சேவையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இயக்கப்பட்ட ரயிலில் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் தங்களுடைய பணி அனுமதி கடிதம், அடையாள அட்டை ஆகியவற்றைக் காண்பித்து பயணச்சீட்டை பெற்றுச் சென்றனர்.
ரயில் நிலையம் நுழைவு வாயில் ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பயணிக்குமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு ரயிலில் பயணிகள் பயணித்தனர்.
இதையும் படிங்க: 5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!