காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் 42 ஊராட்சி மன்றத் தலைவர், 21 ஒன்றிய கவுன்சிலர், மூன்று மாவட்ட கவுன்சிலர், மற்றும் 200-க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து நிறைவடைந்தது.
398 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகள், குன்றத்தூர் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள முத்துக்குமரன் கலைக் கல்லூரியில் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று(அக்.12) எண்ணப்பட்டது.
வாக்கு எண்ணும் பணியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பணியில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் அறைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அடிப்படை வசதிகள்கோரி போராட்டம்
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் தங்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவில்லை எனக்கூறி, வாக்கு எண்ணும் பணியைப் புறக்கணித்தனர். தங்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் ஏற்படுத்தித் தரும் வரை பணியில் ஈடுபட மாட்டோம் எனத் திடீரென அவர்கள் தெரிவித்தனர்.
அதன்பின் உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டபின், பணிகள் மீண்டும் தொடங்கியது.