கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளான, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், பால், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகளையும், மளிகைப் பொருட்களையும் விற்பனை செய்யும் ராஜாஜி சந்தையில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் பொதுமக்கள் அங்கு காய்கறிகள் வாங்க தடை விதிக்கப்பட்டது. இதனால், சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி அந்தந்தப் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
ராஜாஜி சந்தை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் வசித்த ஒருவருக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதையும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜாஜி சந்தையில் மக்கள் நெருக்கடியைக் குறைக்கவும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் தற்காலிகமாக வையாவூர் சாலை, பழைய ரயில் நிலையம் அருகில் தற்காலிக காய்கறிச் சந்தைகள் அமைக்கும் பணியை காஞ்சிபுரம் பெருநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில், பெருநகராட்சி பொறியாளர் மகேந்திரன் மேற்பார்வையில் அலுவலர்கள், ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு போர்க்கால அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட காய்கறிச் சந்தையை அமைக்கும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கைது - க.பாண்டியராஜன்