காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,100 கோயில்கள் உள்ளது. இதில் 670 பெரிய கோயில்களில் சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக காஞ்சிபுரம் மாநகர் பகுதியில் அமைந்து இருக்கக்கூடிய கந்தபுராணம் அரங்கேறிய குமரக்கோட்டம் சுப்பிரமணிய திருக்கோவிலில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை(செப்டம்பர் 1) கோவிலுக்கு வரும் பக்தர்கள், தகுந்த இடைவெளி, கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு பின்புதான் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என இந்து அறநிலையத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பொது முடக்கம் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் மூடப்பட்டிருந்தது, ஆனால் வழக்கம்போல பூஜைகள் நடந்தன. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான காமாட்சி அம்மன் திருக்கோவில், ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், அத்திவரதருக்கு புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோவில்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
நாளை (செப்டம்பர் 1) ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். காலையில் 6 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.