பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தரிசனம் செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "கடவுள் நம்மை பாதுகாப்பார், ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், "கரோனாவை கட்டுப்படுத்த பாதுகாப்பு கவசம் முதலில் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு மூன்று லட்சம் கவசங்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
அவற்றை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்கிறோம். அதேபோல இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா எல்லாவற்றுக்கும் தலைமை தாங்குகிறது. குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள கரோனா நோயாளிகளுக்கும் இந்தியாவால் தேவையான தடுப்பூசிகளை தயாரித்து கொடுக்க முடியும்.
இதனை ஏற்கனவே ஆஸ்திரேலிய தூதரும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரடி சென்று தடுப்பூசி தயாரிப்பை ஊக்கப்படுத்தினார். தடுப்பூசியை மட்டும் நம்பி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'கோதாவரி தண்ணீரை கொண்டுவர பக்கபலமாக இருப்பேன்' - தமிழிசை சௌந்தரராஜன்