காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புளியரங்கோட்டை கிராமத்தில் உள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். இப்பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றிவருகிறார், இவரே தலைமையாசிரியரும் ஆவார்.
பள்ளிக்கு போதிய மாணவ-மாணவிகள் இல்லாததால், இப்பள்ளிக்கு உதவியாளர்கள் யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை. ஆகவே பள்ளியை மாணவ மாணவிகளே சுத்தம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லத்திகா வகுப்பறையின் சாவியை தொலைத்துவிட்டதாகக் கூறி, அந்த மாணவியை தலைமை ஆசிரியை தேவி கம்பால் அடித்தும், காலால் உதைத்தும் உள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் காயமடைந்த பள்ளி மாணவி லத்திகா கதறி அழுதுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பள்ளியில் சென்று பார்த்தபோது மாணவி வகுப்பறையை விட்டு வெளியில் ஓடி வந்துள்ளார். அதன் பின்னர், மாணவியின் பெற்றோர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மாணவியை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.