தமிழ்நாட்டில் இன்றுமுதல் (ஜூன் 14) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படுகிறது. மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுபானங்கள் பெறுவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறது.
111 அரசு டாஸ்மாக் கடைகள்
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 111 அரசு டாஸ்மாக் கடைகள் இன்று (ஜூன் 14) காலை திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. அதையொட்டி அதிகாலை முதலே மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் டோக்கன் பெறுவதற்கு நீண்ட வரிசையில் தகுந்த இடைவெளி ஏதுமின்றி கூட்டம் கூட்டமாக ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு டோக்கன்களை பெற்றுக்கொண்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட உடன் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
கரோனா பரவும் அபாயம்
ஒரு மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த மதுப்பிரியர்கள் மதுபானங்களை அள்ளிச் செல்கின்றனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகளவில் கூடுவதால் பாதுகாப்புக்காக காவலர்கள் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் வேதனை
டாஸ்மாக் கடைகளில் தகுந்த இடைவெளியில்லாமல் கூட்டம் கூட்டமாக குவிந்துவரும் மதுப்பிரியர்களால் மீண்டும் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.