தமிழ்நாட்டில் நடைபெற்ற சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாடுகளின் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் தொழில்துறைக்கும் சியட் நிறுவனத்திற்கும் இடையே 2018ஆம் ஆண்டு ஜீலை 5ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே கண்ணன் தாங்கலில் 4 ஆயிரம் ரூபாய் கோடி முதலீட்டில் புதிய சியட் டயர் தொழிற்சாலையை அந்நிர்வாக இயக்குநர் ஆனந்த் கோயங்கா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஸ்ரீ பெரும்புதூரில் வணிக உற்பத்தியை சியட் நிறுவனம் தொடங்கியுள்ளதற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். மேலும் வாகன உற்பத்தியைப்போல் டயர் உற்பத்தியிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என்றும் இருசக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் டயர் உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் கூறினார்.
இந்தியாவில் 40 விழுக்காடு டயர் உற்பத்தி தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் முதலீட்டுத் திட்டங்களை ஆய்வுசெய்து உத்தரவு வழங்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க சிறப்புச் சலுகைகளை அரசு உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.
ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் சக்தி உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்று பெருமிதம் தெரிவித்த அவர், சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும் சியட் நிறுவனம் ஆராய்ச்சி துறையையும் சென்னையில் தொடங்க வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: கொரோனாவுக்குச் சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்ற சர்ச்சை... ஸ்டான்லி மருத்துவமனை டீன் முற்றுப்புள்ளி!