செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அக்கிராம மக்கள், குடிநீர் பிரச்சனைக் குறித்து ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகையால், இன்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் தடுப்புகள் போட்டும், அரசுப் பேருந்தை சிறைபிடித்தும், சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இதையறிந்த செய்யூர் காவல் ஆய்வாளர் சம்பவம் நடந்த இடத்திற்க்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிறகு கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியும் அளித்தார். அதன் பின்னரே, அக்கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலானது, சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்றது.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் - பெசன்ட் நகர் இணைப்பு சாலை - திட்ட அறிக்கை தாக்கல் செய்ய ஆணை