காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ராமானுஜரின் அவதார உற்சவ விழா ஆண்டுதோறும் 10 நாள்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இந்த விழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஆயிரத்து நான்காம் ஆண்டு அவதார உற்சவ விழா 10 நாள்கள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், கரோனா தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதால் தமிழ்நாடுஅரசு, திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக உற்சவ விழா பக்தர்கள் கூட்டமின்றி எளிமையாகத் தொடங்கியது. மேலும் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க கோயில் நிர்வாகம் சார்பில் இன்று (ஏப்.19) நடந்த சாத்துமுறை விழா யூ டியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் இத்திருவிழாவின் மிகவும் விசேஷமான ராமானுஜர் அவதரித்த நாளான இன்று ராமானுஜரை தரிசிக்க பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் குவியத் தொடங்கினர். தொடர்ந்து கோயில் வளாகத்துக்குள் உள்ள கண்ணாடி மாளிகையின் முன்புறம் உள்ள மண்டபத்தில், பொதுமக்கள் யாரும் பார்த்திராத வண்ணம் திரை அமைத்து கோயில் பட்டர்கள் திவ்யப் பிரபந்தம் பாடத் தொடங்கினர்.
இதனால் பக்தர்கள் ராமானுஜரை பார்க்க இயலாமல் ஏமாற்றமடைந்தனர். வெகுநேரமாகியும் கண்ணாடி மாளிகையின் முன்புறம் மண்டபத்தில் இருந்த திரையை அகற்றாமல் இருந்த காரணத்தினால் இந்து அறநிலையத் துறை அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒரு சிலர் மண்டபத்தின் கதவை திறந்து உள்ளே செல்ல முயற்சிகளும் மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியது.
இதையும் படிங்க:
நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நட்டு மௌன அஞ்சலி!