காஞ்சிபுரம் மாவட்டம் கீரப்பாக்கம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் பூசாரியாக பணியாற்றுபவர் பிரேம்குமார். இவர் நேற்று முன்தினம் இரவு கோயிலை பூட்டிவிட்டு காட்டூர் பகுதியில் உள்ள தனது கோழி,முயல் வளர்க்கும் பண்ணைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை சுற்றிவளைத்த கொள்ளையர்கள் கும்பல் ஒன்று, அவரது செல்போன் , இரு சக்கர வாகனத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் பிரேம்குமார் அணிந்திருந்த காவி துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கும்பல் அவரது உடலை தனியார் குடியிருப்பு பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் விரைந்து சென்ற காவல்துறை தீவிர விசாரனை மேற்கொண்டு உடலை தடயவியல் நிபுணர்களை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கீரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது