காஞ்சிபுரம்: ரயில்வே வாரியத்தின் தென்மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.வேல்முருகன் நேற்று (ஜூலை 15) காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள புதிய ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ரயில்வே நிலையம் சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறதா, அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக உள்ளதா என்பன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ரயில் நிலையத்தில் இருந்த ரயில் பயணிகளின் கோரிக்கைகள், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து அதற்கு அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரயில்வே நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அறிந்துக்கொள்ள காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டேன்.
இந்த ரயில்வே நிலையம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பயணிகள் விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற, தென்னக ரயில்வேயிடம் வலியுறுத்தப்படும்.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றப்போது, அவர் அறிவுறுத்தியதன் பேரில் காசி, அயோத்தி, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுலா, ஆன்மிக ரீதியில் ரயில் பயணிகள் வைக்கும் கோரிக்கைகளை தென்னக ரயில்வேயின் பார்வைக்கு கொண்டு செல்வேன்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் பா.ஜ.க மாவட்ட கல்வியாளர் அணியின் துணைத் தலைவர் சுபாஷ், ரயில்வே நிலைய மேலாளர், பணியாளர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: viral video: பலூன் கேட்ச் - சமந்தாவுடன் சமத்தாக விளையாடும் நாய்..