செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே முருக்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (75). இவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவருக்கு கிராமத்தில் சுமார் 15 ஏக்கரில் நிலம் உள்ளது. மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்துகொடுத்துவிட்டார்.
இந்நிலையில், இவருடைய சொத்தை ஆளுக்கு தலா மூன்று ஏக்கர் வீதம் சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளார். இரண்டு மகன்களில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். ஆகவே, இவருடைய சொத்தை இவர் இறப்புக்குப் பிறகு மற்றொரு மகன் ( ஏழுமலை) எடுத்துக் கொள்ளலாம் என்ன தந்தை அண்ணாமலை நில பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயருக்கே எழுதி வைக்க வேண்டும் என ஏழுமலை தன் தந்தையை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என அண்ணாமலை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த மகன் ஏழுமலை தனது தந்தையை இன்று வயல்வெளியில் வைத்து டிராக்டரை ஏற்றி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அண்ணாமலையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தலைமறைவாக உள்ள ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.