ஐய்யம்பேட்டை கந்தப்பர் தெருவைச் சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். மூவரும் பட்டதாரிகள். இரண்டு மகன்கள் உள்ளூரில் வேலை செய்கின்றனர். மகேஷ் என்ற மகன் மட்டும் சிங்கப்பூரில் பணிபுரிந்தார். சிங்கப்பூரில் வேலை செய்யும் மகேஷ் அவ்வப்போது தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து செல்வார் .
இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு சிங்கப்பூரில் பணியாற்றி விட்டு தன் சொந்த ஊரான ஐய்யம்பேட்டைக்கு வந்தவர் மதுபோதையில் தன்னுடைய தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆவேசப்பட்ட தந்தை மணி, தன்னுடைய மூத்த மகன் மோகனவேல் மற்றும் இளைய மகன் ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து மகேஷை தாக்கியுள்ளளார்.
இதில் படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். உடனே அவருடைய சடலத்தைத் தூக்கி அங்குள்ள மின்விசிறியில் தொங்கவிட்டுள்ளனர். பின்பு மகேஷ் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி உள்ளனர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் மணிமாறன், மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து மணி,அவரின் மனைவி தமிழ்ச்செல்வி, மூத்த மகன் மோகனவேல், இளைய மகன் ரமேஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்து வாலாஜாபாத் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.