செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் மாதம் டெல்லியில் இருந்த அவரை தமிழ்நாடு சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட சிவசங்கர் பாபா
பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வரை சிவசங்கர் பாபா மீது நான்கு போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதேபோன்று பெங்களூரு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் மற்றொரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 3) செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில், சிவசங்கர் பாபா முன்னிறுத்தப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்
வழக்கினை விசாரித்த நீதிபதி, வருகின்ற 17ஆம் தேதிவரை சிவசங்கர் பாபாவை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்காக, காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
அப்போது சிவசங்கர் பாபாவைக் காண நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே குவிந்திருந்த பக்தர்கள், "சிவசங்கர் பாபா நல்லவர், அவர்மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆகையால், அவரை விடுதலை செய்ய வேண்டும்” என முரண்டு பிடித்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் இபிஎஸ், சசிகலாவை விசாரிக்கக் கோரிய மனு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு