காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. இருப்பினும் மறைமுகமாக பல இடங்களில் இந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக அவ்வப்பொழுது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், குமார், முகமது இக்பால் மற்றும் லட்சுமி பிரியா உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று (அக் 9) காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடை சத்திரம், செங்கழுநீரோடை வீதி, மீன் மார்க்கெட் ஆகியப் பகுதிகளில் உள்ள பல கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய சுமார் 75 கிலோ பிளாஸ்டிக் பைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இதற்காக சுமார் 11,000 ரூபாய் அபராதத்தையும் விதித்தனர். இந்த அபராத ரசீதினை, வழக்கம்போல் கைகளால் எழுதி கொடுக்கும் சீட்டு முறையைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் முறையினைப் பின்பற்றி கையடக்க டிஜிட்டல் இயந்திரம் மூலம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வழங்கினர்.
மேலும் கடை உரிமையாளர்களிடம், இனி வரும் காலங்களில் எப்போதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டுமென்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி மார்க்கெட்டில் மலைபோல் குவிந்துள்ள குப்பை - மாநகராட்சி மெத்தனம்!