காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெள்ளரை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு, குண்டு பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த சோபன்ராஜ் (30), தாமஸ் (30), ஸ்டீபன் (24) ஆகிய மூவரும், டாஸ்மாக் கடையின் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டி 4000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை எடுத்துச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்து டாஸ்மாக் கடைக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர், குண்டு பெரும்பேடு பகுதிக்குச் சென்று சோபன்ராஜ், தாமஸ் ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் விற்பனையாளரை மிரட்டி மதுபானங்களை எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகவுள்ள ஸ்டீபனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: ரூ 416 கோடிக்கு மது விற்பனை