காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருகி வரும் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டும் சாலையோரம் மற்றும் நீர்நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள கட்சி மற்றும் அரசு சங்கங்களின் கல்வெட்டுகள், கொடிக்கம்பங்களை சாலையோர விரிவாக்கம் மற்றும் விபத்துகளை தவிர்க்க அவைகளை கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் மேட்டுத்தெரு பகுதியிலிருந்து பாலாறுவரை உள்ள கொடிக்கம்பம் மற்றும் அமைப்பு கல்வெட்டுகளை கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பெரு நகராட்சி நிர்வாகம் அறிக்கை சமர்ப்பித்தது.
அதனடிப்படையில் இன்று ரங்கசாமி குளம், கீழ் கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அரசு சங்கங்களின் கொடிக் கம்பங்கள் மற்றும் திமுகவின் கொடி கம்பம் உள்ளிட்ட 64 வகையான அமைப்புகளை பெருநகராட்சி நிர்வாக ஊழியர்கள் காவல் துறையினர் பாதுகாப்புடன் அகற்றினர்.
அகற்றப்பட்ட கழிவுகளை உடனடியாக காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இந்த சாலையில் இன்னும் பல கம்பங்கள் அகற்றப்படவுள்ளதாகவும் தொடர்ந்து இப்பணி நீதிமன்ற அறிவுரையின்படி நிறைவேற்றப்படும் எனவும் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார்.