தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும், தீநுண்மி பரவலைத் தடுக்கும்பொருட்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித் திரியும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வாகனங்களைப் பறிமுதல்செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை ஆறாயிரத்து 327 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு 6 ஆயிரத்து 640-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் காஞ்சிபுரம் நகரில் பறிமுதல்செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி தடையை மீறி சுற்றித்திரிந்த வாகனங்களை உரிமையாளர்களுக்குப் படிப்படியாக ஒப்படைக்குமாறு காவல் துறையினருக்கு அறிக்கை விடுத்திருந்தார்.
அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி உத்தரவின்பேரில் ஊரடங்கில் முதற்கட்டத்தில் பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். வாகனத்தின் உரிமையாளர்கள் வண்டியின் உரிமை நகல், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்டவை அளித்த பின்னரே வாகனங்கள் திரும்ப அளிக்கப்பட்டுவருகின்றன.
மேலும், காவல் துறையினரால் எழுதப்படும் வழக்கு எண்ணை பொதுமக்கள் அழிக்கக் கூடாது. வழக்கு முடியும்வரை பாதுகாத்து வைக்க வேண்டும் என எச்சரித்து வாகனங்கள் திருப்பி அளிக்கப்பட்டுவருகின்றன. ஊரடங்கு தடை முடிந்த பின்னர் இவர்கள் நீதிமன்றத்தின் மூலமாக அபராதம் கட்டி இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கே.கே.நகரில் கஞ்சா விற்பனை: ஒருவர் கைது