காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவரான முடி திருத்தம் கடை வைத்துள்ள மணிகண்டன் (25) என்பவர் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு நண்பர்களுடன் மதுபானம் அருந்த சென்ற நிலையில், நண்பர்கள் மட்டும் வீடு திரும்பினர்.
இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் சிவகாஞ்சி காவல் துறையினரிடம் மணிகண்டன் காணவில்லை எனப் புகார் அளித்திருந்த நிலையில், கீழ்கதிர்பூர் கிராமத்தில் டாஸ்மாக் கடைக்கு சிறிது தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மணிகண்டன் உடலை உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் அனுப்பிவைத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் மணிகண்டன் உடல் வைக்கப்படிருந்த காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சாலை முன்பு மணிகண்டனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் இந்த வழக்கை தற்கொலை வழக்காகப் பதிவுசெய்வது கூடாது எனவும் இதைக் கொலை வழக்காக பதிவுசெய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த ஆய்வாளர் ஜெய்சங்கர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு உடலை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டனர்.
அரசு மருத்துவமனை வளாகத்தின் முன்பு இந்தச் சாலை மறியல் நடைபெற்றதால் அரைமணி நேரத்திற்குமேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.