காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே இன்று (ஜூலை 10) அதிகாலை பனப்பாக்கம் வனப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் காயம் அடைந்த புள்ளிமான் துடிதுடித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட இளைஞர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு உரிய நேரத்தில் வரவில்லை என தெரிகிறது. இதனால், புள்ளிமான் பொதுமக்கள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானுக்கு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்ததாகவும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புள்ளிமான் உயிரிழந்ததாக கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மான் உயிரிழந்த தொடர்பாக காவல் துறையினர் மற்றும் வனத்துறையினரிடம் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு சென்ற ஒரகடம் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை சமாதானம் செய்தனர். அதன் பின் உயிரிழந்த புள்ளி மாணை வனத்துறையினர் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: யானையின் தந்தம் மற்றும் மண்டை ஓட்டை விற்க முயன்ற 9 பேர் கைது