காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதியில் சுமார் 235 பேர் தங்கி படித்துவருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே சட்டக் கல்லூரி கேன்டீனில் வழங்கும் உணவு தரமற்று இருப்பதாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை உணவு அருந்திய மாணவிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஆறு மாணவிகள் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், மற்ற மாணவர்கள் உள், புற நோயாளி பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் இது குறித்து சட்டக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததால் இன்று வகுப்பை புறக்கணித்து தரமான உணவு, குடிநீர் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுதும் நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் சட்டக் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் எந்த ஒரு வாகனமும் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர். பின்னர் கேளம்பாக்கம் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் மாணவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சட்டக் கல்லூரி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்த பின்பு மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.