காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் பெண்களுக்கான ஆடைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊதியம் தராததால் பணியை புறக்கணித்த ஊழியர்கள்
இந்நிலையில் கரோனா முதல் அலையில் தொழிற்சாலைகள் மூடியிருந்த போது வழங்கப்பட்ட ஊதியத் தொகையை தற்போதுவரை மாத ஊதியத்தில் பிடித்துக்கொண்டு வழங்குவதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்துவரும் ஊழியர்களுக்கு தற்போதுவரை ஊதியம் உயர்த்தி தராததால் திடீரென பணியை புறக்கணித்த பெண் ஊழியர்கள், தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து சமூக இடைவெளியின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்துவந்த ஒரகடம் காவல் துறையினர் தனியார் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காவலர்களின் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.