காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சத்திய மூர்த்தி. இவரது மனைவி புவனா(22).
இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதற்கிடையில், புவனா ஆறுமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் சத்தியமூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து புவனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் நேற்றும் புவனாவுக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த புவனா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவரது கணவர் இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க புவனாவின் சடலத்தை காலையில் ஈமச் சடங்குகள் செய்து எரிக்க முயற்சி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், புவனாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விஷ வண்டு கடித்ததில் மயங்கி விழுந்த பெண் தொழிலாளர்கள்!