காஞ்சிபுரம்: நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தடைகளைத் தளர்த்தி திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளை அனுமதித்து திரைப்படங்களைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என நடிகர் விஜய் முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.
அதையடுத்து திரைஅரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளை அனுமதித்து திரைப்படங்களைத் திரையிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு தற்போது பரவிவரும் புதிய கரோனா வைரஸைக் காரணம்காட்டி 100 விழுக்காடு இருக்கைகளைத் திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி திரைப்படங்களைத் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில், "இருளில் மூழ்கிக்கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கப் போகும் தமிழகத்தின் 2021 மாஸ்டர்" வருக வருக என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசை குறை கூறுவதைப் போல "இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழகம்" என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளதால் போஸ்டரை காணும் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 'விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டுவரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்!'