காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த எடையாளம் பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், பழைய எடையாளம், புதிய எடையாளம் என இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராம மக்களும் ஒரே சுடுகாட்டை பயன்படுத்துகின்றனர். மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சுடுகாடு ஆற்றங்கரையோரம் உள்ளது.
இந்நிலையில், சுடுகாட்டு பகுதியில் இருந்த அரிச்சந்திரன் கோயிலை இடமாற்றம் செய்து, அப்பகுதியில் ஏழுமலை என்பவர் விவசாயம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனோடு மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ள சுடுகாட்டையும் ஆக்கிரமித்து, கிணறு வெட்டி விளைநிலமாக மாற்றியுள்ளார். மூன்று ஏக்கராக இருந்த சுடுகாடு, வெறும் 50 சென்ட் நிலமாக மாறியுள்ளது.
இறந்தவர்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் அடக்கம் செய்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் குமரவேலுவின் சித்தப்பா ஏழுமலை என்பவர், அரசியல் பலத்துடன் இறந்தவர்களை புதைக்கும் சுடுகாட்டை ஆக்கிரமித்திருப்பது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செங்கல்பட்டு ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு கோட்டாட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும், மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட சுடுகாட்டை மீட்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் ரயில்வே துறைக்கு ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு!