சிபிஐ (எம்) கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக் குழு சிறப்பு பேரவை கூட்டம் இன்று (டிச.1) நடைபெற்றது. இந்த சிறப்பு பேரவை கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பேரவைக் கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை போல் காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகின்ற நான்காம் தேதி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
பின்னர் ஊடகங்களைச் சந்தித்துப்பேசிய அவர்,“அதிக அளவில் வேலைவாய்ப்பை தரும் அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க பாமக முதலில் போராட்டம் நடத்த முன் வரவேண்டும். வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டிற்கு அதன்பிறகு போராட்டம் நடத்த வேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவர் கூறுவதை இனி யாரும் கேட்க மாட்டார்கள். அவருடைய பேச்சுக்கு பெரிய அளவுக்கு முக்கியத்துவம் எதுவும் இருக்காது.
இந்திய துணைக்கண்டம் மொத்தம் 140 கோடி மக்களைக் கொண்டுள்ளது. அதில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் வெறும் 24 ஆயிரம் பேர் தான். 24 ஆயிரம் மக்கள் தொகை கொண்டவர்களுக்காக தமிழ் மக்களை அவமானப்படுத்தும் வகையில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குறைப்பதையே குறிக்கோளாக மத்திய அரசு கொண்டுள்ளது. அதனால் தான் பொதிகை செய்தியில் 15 நிமிடம் சமஸ்கிருதத்தை செய்தி வாசிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிடும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருவது புது கடை திறப்பது போல நாள் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டு வருகிறார். மக்கள் பிரச்னைகளுக்கு அவர் முன்வந்து போராட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்றக்கோரிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!