காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2001 ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 96 குழந்தைகள் பலியான சம்பவத்தையடுத்து, நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் வகுத்த விதிகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்து தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்து இருந்தது எனத் தெரிவித்து உள்ளார்.
இதே சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது என்றும் கல்வி உரிமைச் சட்டத்திலும், அரசு அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
பள்ளி கட்டடங்களுக்கு உரிமம் பெறுவது, கட்டட ஸ்திரத்தன்மை சான்று பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகளும் இந்தச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்து உள்ளார். ஆனால், மேன்ஷன் போல குறுகிய அறைகளுடன், எந்த அங்கீகாரமும், ஒப்புதலும் இல்லாமல், காஞ்சிபுரத்தில் விதை பப்ளிக் ஸ்கூல் என்ற நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருவதாகவும், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்று உள்ளதாக பொய்யாக விளம்பரம் கொடுத்து மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.
தகுதியான கட்டிட வசதி இல்லாமல், பொய் விளம்பரங்கள் மூலமாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் இந்த தனியார் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்து உள்ளார். இந்த வழக்கு இன்று (மே 24) விசாரணைக்கு வர உள்ளது.
Central Board of Secondary Education CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், அங்கீகாரமற்று செயல்படும் பள்ளிகள் பற்றி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பல பள்ளிகளில் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக சட்டவிரோதமாக பெயர் இருக்கலாம். ‘to be affiliated to CBSE’, CBSE pattern’, ‘likely to be affiliated with CBSE’, ‘running under the aegis to CBSE’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
பெற்றோர்கள் இந்த வாசகங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவை அனைத்தும் அங்கீகாரம் இல்லாத, நிராகரிக்கப்பட்ட பள்ளிகள் ஆகும். தற்போதைய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பாக, www.cbseaff.nic.in இணையதளத்தை ஒரு முறை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: எருது விடும் விழா... சீறிப்பாய்ந்த காளைகள் - மக்கள் உற்சாகம்!