காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன கம்மாள தெருவில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பெரிதும் அவதிப்பட்டுவந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவரும் பகுதியில் இப்படி கழிவு நீர் ஆறு போல் ஓடுவதால் நோய்த்தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பல்வேறு சாலைகளிலும் இதுபோன்று பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுவது வழக்கமாகிவிட்டது. இதனால் அம்மாவட்டத்தில் வாழும் மக்கள் பலரும் நோய் தொற்றினால் அதிக அளவு பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று வருகின்றனர்.
இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டன. இருந்தும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என சின்ன கம்மாள தெரு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ராஜீவ்காந்தி நினைவிடத்தில் டிக்டாக்: கே.எஸ்.அழகிரி கண்டனம்