காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல், பழவேரி, பட்டா, அரும்புலியூர், மதூர், சித்தாலப்பாக்கம், சிறுமையிலூர் என சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கல்குவாரிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகளில் இருந்து தினமும், 500க்கும் மேற்பட்ட லாரிகளில் ஜல்லி கற்கள், எம்சாண்டு உள்ளிட்ட அதிக பாரத்துடன் திருமுக்கூடல் வழியாக ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதும், சாலைகளும் சேதமடைவதாக பலமுறை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்துள்ளன.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று (ஆக.14) பொதுமக்கள் திருமுக்கூடல் பகுதியில் கல்குவாரிலிருந்து வரும் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால் திருமுக்கூடல் பகுதியில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த கல்குவாரிகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க திருமுக்கூடல் சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.