காஞ்சிபுரம்: சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரத்தில் அக்கிராம மக்கள் தினந்தோறும் இரவில் கடந்த 67 நாட்களாக கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(அக்.02) ஏகனாபுரத்தில், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கோபிநாத், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெகநாதன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி அக்கிராம மக்கள் ஏக மனதாக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சுதந்திர தினத்தன்று இதேபோல் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவதாக முறையாக மீண்டும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேலும், ஏகனாபுரம் மட்டுமல்லாமல் மேலேறி, நெல்வாய், வளத்தூர், பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமத்திலும் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திலும் அமையவிருக்கும் விமான நிலையத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து, விவசாய நிலங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைச்சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி: ஆளுநர், முதலமைச்சர் மரியாதை