கோடை விடுமுறை முடிந்து நேற்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் கட்டணம் மிகக் குறைவாக இருப்பதால், சுற்றுப் பகுதியில் இருக்கும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இதில் ஆண்டுதோறும் பள்ளிக் கட்டணத்தை தவணை முறையில் பெற்றுக்கொண்டு வந்தனர்.
ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பள்ளி நிர்வாகம் முழுமையாக கட்டணத்தைச் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் உள்ளே செல்ல அனுமதி அளித்தது. மேலும், கட்டணம் செலுத்தாத சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளே செல்ல நிர்வாகம் அனுமதி மறுத்தது.
பள்ளி திறந்த முதல் நாளில் வகுப்பறைக்கு மாணவர்களை அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த பெற்றோர் நிர்வாகத்திடம் இது குறித்து முறையிட்டனர். இதற்கு, நிர்வாகம் செவி சாய்க்காத காரணத்தால் பெற்றோர்கள் பள்ளி முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், வாகனங்கள் செல்லாதவாறு இருக்க இருபுறமும் தடுப்புகளை அமைத்து சாலை மறியல் போராட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வைத்துக் கொண்டு நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.