காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் உள்ள ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று பீமன் - துரியோதனன் படுகள உற்சவம் நடைபெற்றது.

உற்சவத்திற்காக பிரமாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.

பீமன் - துரியோதனன் படுகள காட்சியை, தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், ஓரிக்கை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்களும் கண்டு தரிசனம் செய்தனர். அப்போது, தங்களின் வேண்டுதல் காணிக்கையைச்செலுத்தி திரெளபதி அம்மனை வழிபட்டுச்சென்றனர்.