காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் 48ஆவது நாளில் அந்த வைபவம் நிறைவுபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், கடந்த 48 நாட்களாக அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பொதுமக்கள் தரிசிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொண்ட பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதுவரையில் ஒரு கோடியே ஏழாயிரத்து 500 பேர் அத்திரவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இன்றுமுதல் வழக்கம்போல் பக்தர்கள் வரதராஜ சாமியை தரிசனம் செய்யலாம் எனவும் வைபவத்திற்காக ஏற்படுத்திய பாதைகளை ஓரிரு நாளிலும், நகர் முழுவதும் ஏற்படுத்திய காவல் தடுப்புகள், சாலை சீரமைப்பு உள்ளிட்டவைகள் பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என்று கூறினார்.
மேலும், இரண்டு நாட்கள் நகர் முழுவதும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும், இதற்காக துப்புரவுப் பணியாளர்கள் முழுமையாக ஈடுபடுவார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை9 முதல் தகவல் அறிக்கை காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.