காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் பல்வேறுவிதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு நேற்று (மார்ச் 5) மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்தார்.
மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சி
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் உள்பட அங்கிருந்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அந்த மையத்தில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பொதுமக்கள் வாக்களிக்க முயன்றனர்.
அதிலும் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அங்கிருந்த அலுவலர்கள் இயந்திரக் கோளாறுகளைச் சரிசெய்ததை அடுத்து, பொதுமக்கள், நகராட்சி அலுவலர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தேர்தல் விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.
கள நிலவரம்
மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பங்கேற்கும் முன், அந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்கவில்லை. வெற்று நாற்காலிகளுடன் காணப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு நிகழ்ச்சியில் டெங்கு தடுப்பு ஊழியர்கள் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் வருவதற்கு சில மணி நேரம் முன்பு பேருந்து நிலையத்திலிருந்து சில முதியவர்களை அழைத்துவந்த அலுவலர்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்தனர். மேலும், அங்கிருந்த இயந்திரங்கள் முறையாக வேலை செய்யவில்லை.
தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டவே இதுபோன்று உரிய முன் ஏற்பாடுகளின்றி மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், முதன்முதலாக நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவில் ஏற்பட்ட கோளாறுகள், தேர்தலின்போதும் நடைபெறலாம் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: 'எண்ணிக்கையைவிட லட்சியத்திற்குதான் முதலிடம்'