காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலருக்கான மேலாண்மை நிர்வாகம் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 'மாமல்லபுரம் சிறப்புமிக்க சுற்றுலாத் தளங்கள் உள்ள இடமாக திகழ்கின்றது. இந்த இடத்தில் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த 100 முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலருக்கான மூன்றாம் மேலாண்மை நிர்வாகம் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்துவதில் சரியான தளமாக அமைந்திருக்கும்.
இப்பயிற்சியை முழுமையாக கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு கற்பித்து தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலக அளவில் மாணவர்களைச் சிறப்படையச் செய்வது ஆசிரியர்களான உங்கள் கடமையாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.