காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், மொத்தம் 672 படுக்கைகள் உள்ளன. கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ள 375 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 260 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி கொண்டும், 115 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி இல்லாமலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழலில் ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. புதியதாக வரும் நோயாளிகள் ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள் இல்லாததால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கரோனா அறிகுறியுடன் வருபவர்கள், கரோனா பரிசோதனைக்காக வருபவர்கள் மருத்துவமனையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த சூழலில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 18 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மகப்பேறு, குழந்தைகள் நல கட்டடத்தை தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேற்று (மே. 22) திறந்து வைத்தார்.
இக்கட்டடத்தில் 250 படுக்கை வசதி உள்ளது. முதற்கட்டமாக, 25 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த வாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் ஆய்வு செய்தபோது கூடுதலாக ஆக்ஸிஜன் படுக்கை வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை வழங்கியுள்ளோம். இன்னும் ஒரு வார காலத்தில் 250 படுக்கைகளிலும் ஆக்ஸிஜன் இணைப்பு தரப்படும்.
தற்பொழுது 6KL திரவ ஆக்ஸிஜன் பயன்பாட்டில் இருந்து வருகிறது. புதியதாக ஆக்ஸிஜன் படுக்கை அதிகரிப்பால் கூடுதலாக 10KL திரவ ஆக்ஸிஜன் தேவைப்படும். அதனை அமைக்க பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே பணியாற்றிவருகின்றனர். விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையமாக மாறிய தனியார் கல்லூரி!