காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு அரசு அதிகாரிகளிடம் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கேட்டறிந்து, ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக, கரோனா வைரஸ் நோய்த் தொற்றினைக் கண்டறியும், நடமாடும் பரிசோதனை வாகனத்தை அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஆய்வு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், 'காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 வயது முதல் 65 வயது வரை இருப்பவர்களில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 24 நபர்களில் 51 ஆயிரத்து 279 நபர்கள் (16%) மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பணி விரைவில் தொடங்க உள்ளது.
நண்பகல் 12 மணிக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிக்கவில்லை என்றால், ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினரைக் கேட்டு கொண்டுள்ளேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50% படுக்கை வசதிகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், சில மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஒதுக்காமல் நோயாளிகளை அலைக்கழித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் அதுகுறித்தான பிரச்னைகளைக் கண்டறிந்து 5 நாட்களுக்குள் ஆய்வு மேற்கொண்டு படுக்கை வசதிகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளேன்' என்றார்.
மேலும் சீனாவில் கரோனா தொற்று ஒழிந்ததற்கு 100% விழுக்காடு நீராவிப் பிடித்தது தான் காரணம் என ஆய்வில் கூறியுள்ளதால், அனைத்து மக்களும் இரவில் வீடு சென்றதும் குடும்பத்தாருடன் நீராவிப் பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கோரிக்கை விடுத்தார்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வப்பெருந்தகை மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கரோனா நோய்த் தொற்றின் மன உளைச்சலால் நோயாளி தற்கொலை!