காஞ்சிபுரம் புதிய ரயில்வே சாலையில் சாலை விரிவாக்கப் பணியின்போது மின்கம்பம் ஒன்றினை அகற்றாமல் சாலை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் இச்சாலையில் இருக்கும் மின்கம்பத்தால் பெரும் அவதிப்பட்டுவந்தனர்.
போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருக்கும் இந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பலமுறை அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவிடுத்திருந்த நிலையில் இன்று (டிச. 06) அதிகாலை 15 நபர்களை ஏற்றிவந்த தனியார் தொழிற்சாலை சிற்றுந்து ஒன்று இந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மின்கம்பம் உடைந்து மின் வயர்கள் அறுந்து சாலையில் விழுந்தது. இதில், நல்வாய்ப்பாக சிற்றுந்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.
மேலும் அருகில் உள்ள மீன் சந்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் மக்கள் வந்துசெல்லும் நிலையில், அதிகாலை நேரத்தில் இவ்விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.