காஞ்சிபுரம்: தமிழ்நாட்டிற்கு மூன்று நாள் சுற்றுலா பயணமாக வந்துள்ள மொரீஷியஸ் குடியரசு தலைவர் பிரித்விராஜ் சிங் ரூபன், மூன்றாவது நாளான நேற்று (நவ.14) கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவரை வருவாய் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் உட்பட மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் திருக்கோயில் வரலாறு மற்றும் தாயார் சன்னதி, மூலவர் வரதராஜ பெருமாள் ஆகிய சன்னதிகளில் அவர் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து தோஷம் நீக்கும் தங்க பள்ளியை வழிபட்டு கோயில் திருவிழா மற்றும் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு இட்லி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றான காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை புரிந்த அவரை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நடராஜ சாஸ்திரி, கார்த்தி, மணியம் உள்ளிட்டோர் மேள தாளங்கள் முழங்க இரட்டைக் குடைகளுடன் வரவேற்று, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு பிரசாதங்களை வழங்கினர்.
மேலும், இத்திருக்கோயில்களில் தனது குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்துகொண்ட அவர், சிறப்பு விருந்தினர்கள் புத்தகத்தில் தனது வருகையையும் பதிவு செய்தார். இதன்பின், பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரதநாதர் திருக்கோயில் மற்றும் கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டம் ஸ்ரீ சுப்பிரமணியசாமி முருகன் திருக்கோயிலும் அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். இவரின் வருகையையொட்டி, காஞ்சிபுரம் முழுவதும் காவல்துறை சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக, முதல் நாள் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்ட அவர் இரண்டாவது நாள் சென்னையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: திருக்கார்த்திகை: முதல் 2,000 பேருக்கு திருவண்ணாமலையில் ஏற அனுமதி