காஞ்சிபுரம்: உத்தரமேரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள கடல்மங்கலம் கிராமத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கண்ணாடி மணிகள், அதைத் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் மற்றும் அதை உருக்கும் உலைகலன் ஆகியவை இருப்பதாக உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து கொற்றவை ஆதன் கூறியதாவது, “உத்திரமேரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் மங்கலம் கிராமத்தில் அழிஞ்சில் காடு மற்றும் மடு ஓடை ஆகிய நீர் நிலைகளுக்கு அருகே கள ஆய்வு மேற்கொண்ட போது, பல நிறங்களில் பல வடிவங்களில் முழுமையான மற்றும் உடைந்த நிலையில் பல மணிகள் கிடைத்தன.
இந்த மணிகள் தயாரிப்பதற்கு முந்தைய நிலையில் இருக்கும் மூலப் பொருட்களும் பல நிறங்களில் மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் கருநீலம் ஆகிய நிறங்களில் பல துண்டுகளாகக் கிடைத்தன. அதன் அருகிலேயே மேடான பகுதியில் உடைந்த பானை ஓட்டுத் துண்டுகளும், சில பானை ஓட்டுத் துண்டுகளில் கருப்பு,சிவப்பு, பச்சை மற்றும் கரும்பச்சை ஆகிய நிறங்களில் மெழுகு போன்ற பூச்சும் காணப்பட்டன.
சில பானை ஓடுகளில் ஒரு பக்கமும் சில பானை ஓட்டுத் துண்டுகளில் இரண்டு பக்கங்களிலும் இந்த மெழுகுப் பூச்சு காணப்பட்டது. கீழடி மற்றும் அரிக்கமேடு அகழ்வாய்வில் கிடைத்த மணிகளோடு இங்குக் கிடைத்த மணிகளை ஒப்பிட்டுப் பார்த்ததில், அதன் வடிவங்களோடும் வண்ணங்களோடும் அளவுகளோடும் இங்குக் கிடைத்த மணிகளும் முழுமையாக ஒத்துப் போவதைக் காண முடிகிறது. எனவே, இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அதேபோல், அழிஞ்சில் காட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மேற்குப் பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு அருகே, சித்தமல்லி கிராமத்திற்குச் செல்லும் வழியில் கள ஆய்வு மேற்கண்ட போது, வட்ட வடிவில் பானை ஓடுகளால் எழுப்பப்பட்ட இரட்டை அடுக்கு சுவர் அமைப்பு கொண்ட ஒரு முழு உலை போன்ற அமைப்பையும் காண முடிகிறது. அதன் அருகிலேயே மேடான பகுதிகளில் சிதைந்த நிலையில் இதுபோன்ற சில உலைகள் இருப்பதையும் கண்டறிந்தோம்.
இவ்விடத்தின் அருகிலேயேயும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய மணிகள் முழுமையாகவும் உடைந்த நிலையிலும் மணிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்களின் துகள்கள் போன்றவையும் கிடைத்தன. பானை ஓட்டுத் துண்டுகள் மெழுகு பூச்சுடன் கூடியதாகவும் ஆங்காங்கே இருந்தன.
உறைக் கிணறு போன்ற வட்ட வடிவில் காணப்பட்ட முழுமையான உலையானது மூன்றரை அடி நீளம் மூன்றரை அடி அகலம் கொண்டதாக இருந்தது. இதை ஆய்வு செய்த சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள், இது கண்ணாடி மணிகள் உற்பத்தி செய்யும் உலைகள் என்பதும், இவை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதையும் உறுதி செய்தனர்.
இப்பகுதியில், மிகப்பெரிய மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி இருக்க வாய்ப்புள்ளது என்பதை உறுதிசெய்ய முடிகிறது. இச்சான்றுகள் தமிழர்களின் நகர நாகரீக பண்பாட்டு அடையாளத்தின் மைல்கல் எனவும் கூறலாம். கீழடி மற்றும் அரிக்கமேடு ஆகிய இடங்களில் கிடைத்த இதே மாதிரியான மணிகளாக இருந்தாலும் அதைத் தயாரிக்கும் உலைகள் அங்கு இதுவரை கண்டறியப்பட்டதாகத் தெரியவில்லை. அதனால் இந்த இடம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்பட வேண்டியுள்ளது.
ஏற்கனவே, இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள மலைகள் மற்றும் குன்றுகளில் பெருங்கற்கால மனிதர்களின் நினைவுச் சின்னமான கல்வட்டங்கள் மற்றும் கல் திட்டைகளை நாங்கள் கள ஆய்வில் கடந்த காலங்களில் கண்டறிந்திருக்கிறோம். மேலும் இப்பகுதிக்கு அருகிலேயே புதிய கற்கால மனிதர்களின் ஆயுதங்கள் மற்றும் அதைப் பட்டை தீட்டும் இடங்களையும் கண்டறிந்துள்ளோம்.
அதேபோல் தற்போது, சங்க காலத்திற்கு முற்பட்ட கண்ணாடி மணிகளையும் அதைத் தயாரிக்கும் உலைகளையும் கண்டறிந்துள்ளோம். உத்திரமேரூர் ஆலயங்களில் பல்லவர்கள் சோழர்கள் விஜய நகர நாயக்க மன்னர்களின் கல்வெட்டுக்கள் வரலாற்று ஆவணங்களாக உள்ளன.
இதன் மூலம், இந்த உத்திரமேரூர் பகுதியில் பெருங்கற்காலத்திலிருந்து தற்போது வரையிலான தொடர்ச்சியான வரலாற்றுத் தடயங்கள் கிடைத்துள்ளன என்பது சிறப்பு மிக்கதாக உள்ளது. இதன் மூலம் இப்பகுதி பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்விடமாக இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிறந்த தொழில்நுட்பங்களோடு தொழிற்சாலைகளை அமைத்து நகர நாகரிகத்தோடு சீரும் சிறப்புமாக வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு இது முக்கிய சான்றாகும். எனவே இதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தமிழக அரசும் தொல்லியல் துறையும் உரியக் கவனம் செலுத்தி அகழ்வாய்வு மேற்கொண்டால் இன்னும் பல வரலாற்றுச் சான்றுகள் நமக்குக் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: தொப்பூர் கணவாய் சாலை விபத்துகளை தடுக்க தீர்வு.. ரூ.775 கோடியில் அமைகிறது 'மேம்பால சாலை' - தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தகவல்!