தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக திறக்கப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள் மீண்டும் மூடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று (ஏப்ரல்.16) முதல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் புராதன சின்னங்களான அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் திரட்டி பாறை, கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம் போன்ற பகுதிகளும் கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளன.
இதனால் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதேபோல் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் அப்பகுதியிலுள்ள சாலையோர சிறு, குறு வியாபாரிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா ரத்து