காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கனிம வளப் பொருட்களை லாரிகளில் எடுத்துச்செல்வதற்கு கையால் எழுதும் ரசீது வழங்கப்படுவதைக்கண்டித்தும் கனிம வளங்கள் கொள்ளையை தடுக்கும் வகையில் கம்ப்யூட்டர் ரசீது வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழ்நாடு மணல் & எம்.சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் இன்று (செப்.12) 50-க்கும் மேலான லாரி உரிமையாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பபின் மாநிலத் தலைவர் யுவராஜ், 'தமிழ்நாட்டில் மலைகள் உடைக்கப்படுவதில் கனிம வளங்களை எடுத்துச்செல்ல கைகளால் ரசீது எழுதி தருவதன் காரணமாக நூறு லோடுக்கு பில் போட்டுவிட்டு ஆயிரம் லோடு வரை எடுத்துச்செல்கின்றனர்.
இதன் காரணமாக, லாரிகளில் அதிக பாரம் ஏற்ற வற்புறுத்தப்படுவதாகவும், லாரிகள் பழுதடைவதாகவும், காப்பீடு தொகைகள் பெற முடியாமல் போவதும், தொடர்ந்து சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டியுள்ளது.
அதனால், கல் குவாரிகளில் இருந்து கனிம வளங்களை எடுத்துச் செல்லும்போது, கையால் எழுதும் ரசீது வழங்காமல், கம்ப்யூட்டர் ரசீது வழங்கிட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து காஞ்சிபுரம் புவியியல் சுரங்கத்துறை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறாக வரும் காலங்களில் கனிமவள கொள்ளையைத் தடுக்க கையால் எழுதும் ரசீது வழங்குவதை நிறுத்திவிட்டு கம்ப்யூட்டர் வழியில் ரசீது வழங்கிட மாவட்ட ஆட்சியர் ஆவன செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் - ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு