காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் விடுதி நிர்வாகத்தினர் அளவுக்கு அதிகமான பெண்களை ஒரே அறையில் தங்க வைத்துள்ளனர். இதனால் தங்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பெண்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்தனர்.
இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதன் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தங்களது பிரச்னை குறித்து பெண்கள் சமூகவலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டனர்.
இதை அறிந்த மாவட்ட நாம் தமிழர் கட்சியினர், அதன் மண்டல செயலளர் திருமலை, மனோஜ் ஆகியோர் தலைமையில் விடுதியின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அப்பெண்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக மூன்று பேருந்துகளில் 100க்கும் மேற்பட்ட தஞ்சாவூர், மதுரை ஆகிய ஊர்களைச் சேர்ந்த பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதம் உள்ள பெண்களை இன்னும் இரண்டு தினங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வருவாய்த் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!