காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்குட்பட்ட வல்லக்கோட்டை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஐந்து ஒடிசா மாநில இளைஞர்கள் ஒரே அறையில் தங்கி ஒரகடம் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால் இவர்கள் வீட்டில் தங்கி வந்துள்ளனர்.
இவர்களுக்கு எந்த ஒரு வருமானமும் இல்லாததால் ஒரு நாள் சமைத்த உணவையே மூன்று நான்கு நாள்களுக்கு மேலாக சாப்பிட்டு வந்துள்ளனர். இதனால் இவர்களில் திலீப் சத்தார் (வயது 35) என்பவருக்கு மட்டும் இரண்டு நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திலீப் சத்தாருக்கு இன்று வாந்திபேதி நிற்காமல் வந்துள்ளது.
இதனால் அவரது நண்பர்கள் அவரை அருகிலுள்ள பண்ருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கொண்டு சென்ற சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். மீண்டும் மேட்டுப்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு அவரது உடலை கொண்டு வந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வல்லக்கோட்டை பகுதியில் அசாம் வாலிபர் இறந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று நாள்களுக்குள் வடமாநில தொழிலாளர்கள் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா நிலவரம்: சுகாதாரத் துறை விரிவான அறிக்கை